×

கோயில் நிர்வாகம் - வருவாய்த்துறை மோதல் மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்து விவகாரம் விஸ்வரூபம்

* ரூ.200 கோடி மதிப்புக்கு இறுதி முடிவு என்ன?

மதுரை : மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்து விவகாரத்தில் கோயில் நிர்வாகத்திற்கும், வருவாய்த்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சொத்தை மீட்பதில் சிக்கலாகி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு  சொந்தமான சொத்துகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிறைந்துள்ளன. இதனை குத்தகை அடிப்படையில் ஏராளமானோர் அனுபவித்து வருகின்றனர். இந்த சூழலில் மதுரை பைபாஸ் ரோடு அருகே பொன்மேனியில் 14 ஏக்கர் பரப்புள்ள கோயில் நிலம் கணினி சிட்டாவில் தனி நபருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டு இருப்பதை கண்டு கோயில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.

இதுதொடர்பாக கலெக்டர் பொறுப்பிலுள்ள டி.ஆர்.ஓ. சாந்தகுமாரிடம் கோயில் இணை ஆணையர் நடராஜன் புகார் அளித்தார். அதில் ‘கோயில் நிலம் கணினி சிட்டாவில் தனிநபருக்கு பட்டா போடப்பட்டுள்ளது. இந்த சொத்தை கோயிலுக்கு மீட்டு தர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தாசில்தார் செல்வராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்காக தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையே இன்னும் தொடங்கவில்லை. யார் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவும் இல்லை. இதற்கிடையே கோயில் நிர்வாகம் மீது தவறாக புகார் அளித்துள்ளதாக  வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர், டிஆர்ஓவிடம் மனு அளித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதில், ‘கிராம கணக்கில் இருந்தபடி இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவே தாசில்தார் அனுமதி வழங்கி இருக்கிறார், இந்த நிலம் தொடர்பாக ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கோயில் நிலம் இல்லை என்று கூறியபோது கோயில் நிர்வாகம் என்ன செய்தது?’ என எதிர் கேள்வி எழுப்பி உள்ளனர். கோயில் சொத்து விவகாரத்தில் என்ன நடந்தது? என்பது அம்பலத்துக்கு வருவதற்கு முன் கோயில் நிர்வாகம் வருவாய்த்துறையினரிடையே மோதல் போக்கு உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக இந்த விவகாரத்தில் உடனடி விசாரணை நடைபெறாமல், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கோயில் சொத்தை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் மாறுதல் செய்யப்பட்ட கலெக்டருக்கு பதில் புது கலெக்டர் நியமிக்காமல் 10 நாளாக வெற்றிடமாக இருக்கிறது. இந்த தாமதத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்டு முறைகேடாக ஆவண மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்ற புகார் எழுந்துள்ளது. இதற்கு முன்பு மதுரை சொக்கிகுளத்தில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தனிநபருக்கு பட்டா போட்டு கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் மீனாட்சியம்மன் கோயில் சொத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பக்தர்கள் கூறும்போது, ‘மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்துக்கே இந்த சோதனையா? இதில் பல்வேறு மர்மங்கள் புதைந்து கிடக்கிறது, அதனை அம்பலமாக்கி. கடும் நடவடிக்கை எடுக்க தவறினால் கோயில் சொத்துக்கள் தனிநபருக்கு பட்டா மாறுதலில் இருந்து காக்க முடியாது’ என்றனர்.

Tags : Madurai Meenakshi Amman Temple Property Property Vishwaroopam , Madurai,Meenakshi Amman Temple ,Property issue,Temple administration, revenue department
× RELATED பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய...